2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமே எதிர்க்கட்சிகளின் இலக்காக இருக்க வேண்டும்- சோனியா காந்தி

2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமே எதிர்க்கட்சிகளின் முக்கிய இலக்காக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். 

2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமே எதிர்க்கட்சிகளின் இலக்காக இருக்க வேண்டும்- சோனியா காந்தி

நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், பெகாசஸ், வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளில், எதிர்க்கட்சிகள் தங்களது எதிர்ப்பை ஒருமித்த குரலில் வெளிப்படுத்தின. மத்திய அரசுக்கு எதிரான இந்த எதிர்ப்பையும், எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைப்பையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இன்று எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். 

காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்  மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் பங்கேற்றனர்.  அதேபோல் சீத்தராம் யெச்சூரி, டி. ராஜா, திருமாவளவன், ஹேமந்த் சோரன்,   உள்ளிட்ட 19  கட்சி தலைவர்கள்  ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்கள பகிர்ந்தனர்.

கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராக வேண்டும் என அழைப்பு விடுத்தார். மேலும், நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றார். நாடாளுமன்ற தேர்தலுக்கு சரியான திட்டமிடல் அவசியம் எனக் கூறிய அவர், எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

தொடர்ந்து பேசிய சோனியா காந்தி, 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமே எதிர்க்கட்சிகளின் முக்கிய இலக்காக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.