கேரளாவில் இருந்து இயக்கப்படும் ரெயில்களால் கொரோனா பரவும் அபாயம்....

கேரளாவில் இருந்து இயக்கப்படும் பயணிகள் ரெயில்கள் மூலம் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு ஜிகா வைரஸ் உள்ளிட்ட உருமாறிய  கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் இருந்து இயக்கப்படும் ரெயில்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

கேரளாவில் இருந்து இயக்கப்படும்  ரெயில்களால்   கொரோனா பரவும் அபாயம்....

கொரோனாவின் 2-ம் அலை தாக்கம் நிறைவடைந்து, தற்போது தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டள்ளது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் மட்டும் தொற்று பரவும் வேகம் அதிகரித்துள்ளது. அங்கு நாள் ஒன்றுக்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று  உறுதி செய்யப்படுவதால், அண்டை மாநிலங்களுக்கு பெரும் அச்சுறுத்தல் உள்ளது.

குறிப்பாக அங்கிருந்து இயக்கப்படும் ரெயில்கள், கொரனா தொற்றை சுமந்து வரும் வாகனமாக தற்போது திகழ்கிறது. பேருந்து சேவைகள் எல்லையில் நிறுத்தப்பட்ட நிலையில், கேரள மாநில மக்கள் ரெயில்கள் மூலம் சென்னைக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

தினமும் கேரளாவில் இருந்து சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால் தற்போதைய நிலை அப்படி இல்லை. வழக்கம்போல அனைவரும் சாதாரணமாக பயணித்து சென்னை வந்து விடுகின்றனர்.

கேரளாவில் இருந்து 5 ரயில்கள், வடமாநிலத்தில் இருந்து இரண்டு ரயில்கள், பெங்களூரில் இருந்து இரண்டு ரயில்கள் என மொத்தம் 9 ரயில்கள், நாளொன்றிற்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வருகின்றன. இதில் வந்திறங்கும் பயணிகளுக்கு சோதனை செய்யப்படுகிறதா? என்றால் இல்லை என்றே அவர்களிடம் இருந்து பதில் கிடைக்கிறது.

இப்படி வெளிமாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலம் தமிழகம் வருபவர்களால், கொரோனா பரவும் ஆபத்து நிலவுகிறது. எனவே மாநில அரசும், தெற்கு ரெயில்வேயும் இணைந்து இதனை கண்காணிக்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.