அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவர்கள் வராததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்..!

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவர்கள் வராததைக் கண்டித்து  ஆர்ப்பாட்டம்..!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவர்கள் வராததைக் கண்டித்து பொதுமக்கள், நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்களம்பேட்டையில்,  மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

24 மணிநேரமும், செயல்படக்கூடிய இம்மருத்துவமனைக்கு, சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த  சிறுவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் உட்பட பலர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

அவ்வாறு செயல்படும் அரசு மருத்துவமனையில், தலைமை மருத்துவர் உட்பட ஐந்து மருத்துவர்கள் பணியாற்றும் நிலையில், காலை 8 மணிக்கு வரவேண்டிய மருத்துவர்கள், பத்து மணிக்கு மேலாகியும் வராததால், சிகிச்சைக்காக வந்த நோயாளிகள், ஆத்திரமடைந்து, டாக்டரை காணவில்லை என மருத்துவமனை வளாகம் முன்பு,  தமிழக அரசை கண்டித்து கண்டனம் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும்,  இன்று செவ்வாய்க்கிழமை என்பதால், கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனை செய்யக்கூடிய பெண் மருத்துவர்களும் வரவில்லை எனவும்,  நோயாளிகள் அலைகழிக்கப்படுவதாகவும்,  அலட்சியமாக செயல்பட்டு வரும் மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மங்கலம்பேட்டை காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட நோயாளிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, மருத்துவர்கள் வந்துவிடுவதாக கூறியதால், போராட்டத்தை கைவிட்டனர்.

அரசு மருத்துவமனையில் டாக்டரை காணவில்லை என நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க   | "இன்று என்ன நாள்?"... அமைச்சரின் கேள்விக்கு பதிலளித்த மாணவிக்கு அடித்த ஜாக்பாட்!