நொச்சிக்குப்பம்: "பூர்வீக மக்களுக்கு" பட்டா வழங்க வலியுறுத்தல்!

நொச்சிக்குப்பம்: "பூர்வீக மக்களுக்கு" பட்டா வழங்க வலியுறுத்தல்!

"நொச்சிக்குப்பம் பகுதியில் வாழும் பூர்வீக மக்களுக்கு அரசு உடனடியாக பட்டா வழங்க வேண்டும்"  அகில இந்திய மீனவர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் அரசு அறிவித்தபடி மயிலாப்பூர், நொச்சிக்குப்பம் இடங்களில் உள்ள குடியிருப்புகளை மீனவர்களுக்கு வழங்காமல் அதிகாரிகள் விதி மீறல்களில் ஈடுபட்டு வருவதாக ஆதாரங்களை முன்வைத்து அகில இந்திய மீனவர் சங்கத்தின் நிறுவனர் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியத்தின் மூலம் பட்டினபாக்கம் திட்ட பகுதியில் மெரினா லூப் சாலையில் 1188 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டிருக்கிறது. அதில் 534 குடியிருப்புகள் நொச்சிக்குப்பம் வாரிசுதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வாரியத்தில் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. மீதி உள்ள 654 வீடுகளை இந்தியாவில் உள்ள எந்த பகுதியில் உள்ள ஒருவருக்கும் கொடுக்கலாம் என்கிற நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலைப்பாடு தவறானது என தெரிவித்துள்ளார்.

மேலும், கொடுக்கபடுகின்ற 534 வீடுகள் கூட ஒரு குடும்பத்தில் ஒரு ஆண் வாரிசுதாரர்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்  பெண் வாரிசுதாரர்களுக்கு இல்லை என்று சொல்லி மறுக்கப்படவதாகவும் கூறினார்.

தொடர்ந்து, நொச்சிக்குப்பம் பகுதியில் கிட்டத்தட்ட 6 லட்சம் சதுர அடி நிலப்பரப்பு கொண்ட இந்த இடத்தின் இன்றைய சந்தை மதிப்பு ரூபாய் 1500 கோடி என தெரிவித்த அவர், அங்கு வாழும் பூர்வீக மக்களது  நிலத்திற்கு அரசு உடனடியாக பட்டா வழங்க வேண்டுமெனவும்  இதற்காக போராடிய நான்கு பேர் மீது காவல்துறையினர் போட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மயிலை சட்டமன்ற உறுப்பினர் வேலு, மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் எங்களது கோரிக்கைகளை முன் வைத்ததை சுட்டிக்காட்டிய அவர் அமைச்சர் நடவடிக்கை எடுப்பதற்கு தயாராக இருந்தாலும் திமுக மாவட்ட செயலாளர் அமைச்சரை சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை என குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும், தமிழக முதல்வர் இதில் நேரடியாக தலையிட்டு விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்  பூர்வீக குடிமக்களான மீனவர்களுக்கு கடற்கரை பகுதிகளில் வாழ்விடம் அமைப்பதுடன் மீனவர் அல்லாதவர்களுக்கு மீனவர்கள் வாழ்விடங்களில் குடியமர்த்துவதை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்  எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிக்க:'ஒற்றை பதவி'க்கு அடித்துக்கொள்ளும் மதிமுக நிர்வாகிகள்!