சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்.. ஆயிரக்கணக்கான மக்கள் கிரிவளம்.. தீ மிதித்தும் வழிபாடு!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் விமரிசையாக நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கிரிவளம் சென்றும் தீ மிதித்தும் வழிபாடு நடத்தினர்.

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்.. ஆயிரக்கணக்கான மக்கள் கிரிவளம்.. தீ மிதித்தும் வழிபாடு!!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வரலாறு காணாத அளவிற்கு கிரிவலம் வந்து சென்றனர்.

மேலும் வெளியூரில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து 2,800 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பக்தர்களின் பாதுகாப்பு பணியில் 3 ஆயிரத்து 500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. தாமிரபரணி நதிக்கரைக்கு சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் எழுந்தருளி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைதொடர்ந்து சரங்கொன்றை மலர்கள் சாத்தப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள கடும்பாடி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தீமிதி திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இந்நிலையில் இந்த வருடம் நூறுக்கு மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து காப்பு கட்டி நேர்த்திக்கடன் செலுத்தி தீ மிதித்து சுவாமியை வழிபட்டனர்.

திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் ஓம் ஸ்ரீ தாய் நாகாத்தம்மன் கோவிலில் சித்திரா பௌர்ணமி  முன்னிட்டு 17 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது. இந்நிலையில் அம்மனுக்கு ஆயிரத்து எட்டு பால் குடம் எடுக்கப்பட்டு பிறகு சிறு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைதொடர்ந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தீக்குண்டத்தில் பக்தியுடன் இறங்கினர். அங்கு கூடியிருந்த  பக்தர்கள் ஓம் சக்தி, ஓம் சக்தி என பக்தி பரவசத்தில் கோஷங்கள் எழுப்பி சாமியை வழிபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி திண்டிவனம் சாலையில் உள்ள ஸ்ரீ சக்தி பீடம் காளியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு லட்ச தீப திருவிழா நடைபெற்றது. இதை தொடர்ந்து முன்னதாக ஸ்ரீ காளியம்மனுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.  லட்ச தீப திருவிழாவை காண வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.