உயிரைப் பறிக்கும் Instant online loan apps... தப்பிப்பது எப்படி?

உயிரைப் பறிக்கும் Instant online loan apps... தப்பிப்பது எப்படி?

இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில், 5 நிமிடங்களில் உடனடியாக கடன் தரப்படும் என சில போலி நிறுவங்களின் விளம்பரங்களை கண்டு, கடன் பெற்று, பின்னர் அந்நிறுவனங்களின் துன்புறுத்தலுக்கு ஆளாகி பலரும் உயிரை மாய்த்துக்கொள்ளும் தற்போதைய சூழ்நிலையில், அது போன்ற இன்னல்களில் சிக்கிக்கொள்ளாமல், எவ்வாறு தவிர்க்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.  

முன்பெல்லாம், வீதிக்கு வீதி அங்கீகாரம் பெறாத வங்கிகள், தன்னிடம் கடன் கேட்டு வருவோர்களை வெறும் கையுடன் அனுப்பாமல், நாடி வந்தோரின் தேவையை பூர்த்தி செய்து, கேட்ட பணத்தை கொடுத்து அனுப்பிவிட்டு, பின்னர் நாட்கள் செல்ல செல்ல, கொடுத்த கடனுக்கு வட்டியை கேட்டு வீட்டிற்கு வந்து கழுத்தை நெறிக்கும் விதத்தில், சொற்களால் புண்படுத்தி, கடன் வாங்கியவரை தற்கொலைக்கு தூண்டினார்கள்.

காலம் மாற மாற, கூடவே தொழிநுட்பமும் வளர்ந்து வருவதால், கடன் கேட்கும் மற்றும் கொடுக்கும் முறையும் மாறியுள்ளது. இந்த காலத்தில், அனைவரின் கைகளிலும் உலகம் சுருங்கியுள்ளதால், உலகின் ஒரு மூலையில் இருந்து, மற்றொரு மூலையில் இருக்கும் ஒரு பொருளை எளிதில் பெற்றுவிட முடிகிறது. அது போலவே, தற்போது, Instant Online loan apps-ம், பயனர்களின் ஒரு சில அடையாளச் சான்றுகள் மற்றும் தகவல்களை மட்டும் பெற்றுக்கொண்டு, 5 நிமிடங்களில் பயனர் கேட்கும் தொகையை கடன் கொடுக்கின்றன.

இந்தியாவில், ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மற்றும் இதர ஆன்லைன் சேவைகளை, National Payment Corporation of India (தேசிய கொடுப்பனவு கழகம்), RBI-யின் கீழ், கண்காணித்து வருகிறது. அதாவது, Slice, Onecard, Uni போன்ற பிரபல செயலிகள் மட்டுமல்லாமல், இன்னும் பல செயலிகளை கண்காணிப்பது இதன் பணி. NPCI யின் ஒப்புதல் இல்லாத செயலிகளை, முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றே, RBI கூறிவருகிறது.

ஆனாலும் கூட, இணையம் பறந்து விரிந்தது என்பதாலும், உலக மக்கள் அனைவரும் சமூகவலைத் தளங்களில் இணைந்துள்ளனர் என்பதாலும், சில மூன்றாம் தர Instant Online Loan Apps, இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற வலைத்தளங்களில், 5 நிமிடங்களில் கடன் தரப்படும் என்று, இணைய வாசிகளின் கவனத்தை ஈர்த்து, குறிப்பிட்ட அடையாள சான்றுகளை மட்டும் பெற்றுக்கொண்டு, அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக 5 நிமிடங்களில் பணத்தை அனுப்பிவிடுவார்கள்.

இதையும் படிக்க || ஹேக்கிங் மற்றும் இணைய குற்றங்களில் AI பயன்படுத்தப்படுகிறதா?

இதில், அபாயம் என்னவென்றால், உலகின் வேறொரு மூலையில் இருந்துகொண்டு, இணையம் வழியே குற்றங்கள் செய்யும், குற்றவாளிகள், கடன் கொடுப்பது போல கொடுத்துவிட்டு, பின்னர் அவர்களின் புகைப்படங்களை திருடி நிர்வாணமாக சித்தரித்து, மார்பிங் செய்து, அந்த புகைப்படங்களை இணையத்தில் உலாவ விட்டுவிடுவதாக மிரட்டி தொடர்ந்து பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

போலியான நிறுவனத்திடம் சிக்காமலிருக்க, என்ன செய்ய வேண்டும்?

இந்த சூழ்ச்சியில் சிக்காமல் இருக்க, RBI, ஒரு சில வழிமுறைகளை பின்பற்றக்கூறி அறிவுறுத்தியுள்ளது. அதாவது, கடன் வழங்கும் நிறுவனம், RBI யின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை முதலில் தெரிந்துகொள்ளவேண்டும். அப்படி ஒருவேளை RBI யின் விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனம் என்பது தெரியவந்தால், அந்த நிறுவனத்திடம் கடன் வாங்குவதை தவிர்த்துவிட்டு, RBI-யிடம் புகாரளிக்கவேண்டும்.

எப்பொழுதுமே, ஒரு போலியான நிறுவனம், RBI யின் கடன் வழங்கும் வழிகாட்டுதல்களை பின்பற்றாது. அதே போல், தனக்கென ஒரு போலியான இணையதளத்தையும் உருவாக்கி வைத்திருக்கும். கடன் கொடுக்கும் பொழுது, கடனுக்கான ஒப்பந்தம் ஏதுமின்றியும், முக்கிய அடையாளச்சான்றிதல்கள் எதுவும் பெற்றுக் கொள்ளாமலும், எளிதில் கடனை வழங்கிவிடும். இதில் முக்கியமான பகுதி என்னவென்றால், எந்த ஒரு போலியான நிறுவனமும் நிச்சயமாக எதிர்மறையான விமர்சனங்களை பெற்றிருக்கும். அதனால், ஒரு ஆன்லைன் நிறுவனத்திடம் கடன் பெரும் முன், இது போன்ற அனைத்தையும் தெரிந்துகொண்டு, கடன் பெறுவது நல்லது.

இதையும் படிக்க || இந்தியாவில் "ஆப்பிள் பே"... எப்பொழுது செயல்பாட்டிற்கு வரும்?

போலியான நிறுவனத்திடம் கடன் பெற்று மாட்டிக்கொண்டால், என்ன செய்ய வேண்டும்?

ஒரு போலியான நிறுவனத்தை அடையாளம் காணும் பட்சத்தில், RBI-யின் sachet.rbi.org.in-ல் புகார் அளிக்கலாம். இது போன்ற போலி நிறுவனங்களிடம் மாட்டிக்கொண்டால், முதலில், அருகிலிருக்கும் காவல் நிலையத்திலோ, அல்லது இணைய குற்றப்பிரிவிலோ, ஒரு புகார் அளிக்க வேண்டும். இல்லையெனில், தேசிய ஹெல்ப்லைன் எண் 1930-க்கு தொடர்பு கொண்டு, புகாரை தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு மேல் குறிப்பிட்டுள்ள RBI-யின் விதிமுறைகளை பின்பற்றி மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால், Instant Online Loan உள்ளிட்ட செயலிகளிடமிருந்து தப்பிக்க வழிவகுக்கும்.

- வே. ஆனந் பாபு