தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் யார்? இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். இடையே கடும் போட்டி எனத் தகவல் ….

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக செயல்படப் போவது யார் என்பது தொடர்பாக இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். ஆகியோர், தங்களது ஆதரவாளர்களுடன் தனித் தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்க உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இது ஒருபுறம் இருக்க, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக செயல்படப் போவது யார் என்பதில், இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். இடையே போட்டி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக இரு தலைவர்களும், தங்களது ஆதரவாளர்களுடன் தனித் தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். அரசியல் எதிர்காலம் கருதி, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டுக் கொடுப்பதற்கு இ.பி.எஸ். தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு கிடைத்தால் தான், கட்சி தனது கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என இ.பி.எஸ். கருதுவதாகவும் சொல்லப்படுகிறது.

இதனிடையே, 66 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் வருகிற 7ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவராக யாரை தேர்ந்தெடுப்பது, பேரவைக்கு செல்லும் எம்.எல்.ஏ.க்களுக்கான வழிகாட்டல்கள், அடுத்து செய்ய வேண்டியவை உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

Back to top button