தெலங்கானா மாநிலத்தில் 5 கிலோ தங்க புதையல் கண்டெடுப்பு…!!

தெலங்கானா மாநிலம் ஜனகாம மாவட்டத்திலுள்ள பெம்பர்த்தி அருகே அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக பூமியை தோண்டியபோது 5 கிலோ தங்க புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள பெம்பர்த்தி கிராமம் அருகே நரசிம்மா என்பவர் இரண்டு ஏக்கர் நிலத்தை அடுக்குமாடி குடியிருப்பு கட்டி விற்பனை செய்வதற்காக வாங்கியிருந்தார். இந்த நிலையில் அந்த இடத்தில் பூமி பூஜை நடத்தி பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்ட போது செம்பு குடம் ஒன்று வெளிபட்டது.

அதில் சுமார் ஐந்து கிலோ எடையுடைய தங்க ஆபரணங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் தங்க ஆபரணங்களை கைப்பற்றி கருவூலத்திற்கு எடுத்து சென்றனர்.

காகதீய ராஜாக்கள் ஆட்சி காலத்தின் போது பூமிக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்ட தங்க ஆபரணங்கள் தற்போது புதையலாக வெளிப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் ஆய்வு நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.