சென்னையில் வீடு, வீடாக காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணிகள் தொடக்கம்

கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து சென்னையில் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவலின் வேகம் நாளுக்கு நாள் அசுர வேகத்தில் பரவி வருகின்றது.இதனிடையே சென்னையிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றது.

இதனை தடுக்கும் வகையில் சென்னையில் மீண்டும் காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் பற்றிய விவரங்களை சேகரிப்பதற்காக 15 மண்டலங்களிலும் வார்டு வாரியாக களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் சேகரித்த பின்னர் அவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள தேனாம்பேட்டை, அண்ணாநகர், கோடம்பாக்கம், அடையாறு, ராயபுரம், அம்பத்தூர் மண்டலங்களில் அதிகமான ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கண்காணிப்பு, மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.