தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் தடுப்பூசி செலுத்த திட்டம்…

தமிழகத்தில் இன்று தடுப்பூசி திருவிழா தொடங்கவிருக்கும் நிலையில், நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் தடுப்பூசிகள் போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி திருவிழா நடத்த மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. அந்தவகையில் தமிழகத்தில், இன்று தொடங்கி அடுத்த மூன்று தினங்களுக்கு கொரோனா தடுப்பூசி திருவிழா நடத்தப்படுகிறது. இந்நிலையில், இன்று முதல் அடுத்த மூன்று தினங்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. இதுவரை நாளொன்றுக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், அதன் எண்ணிக்கையை இரண்டு லட்சமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், நகர்புற மற்றும் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட ஆயிரத்து 900 மினி கிளினிக்குகள், தடுப்பூசி செலுத்த அனுமதி பெற்ற தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 4 ஆயிரத்து 328 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.

இதன்மூலம் இதுவரை 39 லட்சத்து 44 ஆயிரத்து ஐந்து பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள நிலையில், தடுப்பூசி முகாம்களை அதிகளவில் நடத்த, சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் முயற்சித்து வருகின்றன

Back to top button