ஏற்காடு தொகுதியைக் கைப்பற்ற போவது யார்..? ஒரு அலசல் ரிப்போர்ட்

ஏற்காடு கிராமத்தை மையமாக கொண்டு இத்தொகுதி அமைந்துள்ளது. இங்கு, ஏற்காடு வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட சேர்வராயன் மலை கிராமங்கள், வாழப்பாடி வருவாய் வட்டத்திலுள்ள அருநூற்றுமலை, சந்துமலை, பெலாப்பாடி மலை, ஜம்பூத்துமலை மலை கிராமங்கள், வாழப்பாடி, பேளூர், அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து வருவாய் கிராமங்களும் உள்ளன. பெத்தநாயக்கன்பாளையம் வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட சின்ன கல்வராயன் மலை, பெரியகல்வராயன் மலை, நெய்யமலை கிராமங்களும் இடம் பெற்றுள்ளன.

கல்வராயன் மற்றும் அருநூற்றுமலை கிராமங்களில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதானமாக விளங்கி வருகிறது. விவசாயத்தை பிரதானமாக கொண்ட வாழப்பாடி மற்றும் அயோத்தியாப்பட்டணம் பகுதியில், பாக்கு, தேங்காய் உற்பத்தி தொழிலாளர்கள், நூற்பாலை தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர்.

2021ல் வெளியான வாக்காளர் பட்டியல் கணக்குப்படி, ஏற்காடு தனி தொகுதியில் ஆண்கள் – 1,38,409 பேர், பெண்கள்- 1,44,231, பிற பாலினத்தவர்- 12 பேர் என மொத்தம் -2,82,656 வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த 1957-ம் ஆண்டு முதல் இதுவரை நடந்த தேர்தலில், இத்தொகுதியில் அ.தி.மு.க. 7 முறை வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. 4 முறையும், காங்கிரஸ் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

ஏற்காடு தொகுதி பழங்குடி மக்களுக்கான தொகுதியாக இருந்தாலும், பொதுப்பிரிவில் உள்ளவர்களே இந்த தொகுதியின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பர் என்று கூறப்படுகிறது.

இந்த தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ சித்ரா தான் மீண்டும் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். திமுக சார்பில் தமிழ்செல்வன் களமிறக்கப்பட்டுள்ளார்.

கடந்த தேர்தலில், அதிமுக வேட்பாளர் 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை தோற்கடித்திருந்தார். மேலும் பாமகவும் 17 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தது. இது அதிமுகவுக்கு கூடுதல் பலமாக உள்ளது.

திமுகவுக்கு அதன் கூட்டணி கட்சிகளால் ஓரளவு கூடுதல் வாக்குகள் கிடைத்தாலும், ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட மலை கிராமங்களில், தி.மு.க.வை விட அ.தி.மு.க.விற்கே கணிசமான வாக்கு உள்ளது.

ஏற்காடு தொகுதிக்குட்பட்ட மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு ஜாதி சான்றிதழ் பெறுவது பெரும் சிரமாக உள்ளது. எனவே ஏற்காடு மற்றும் வாழப்பாடி வருவாய் வட்டங்களை ஒருங்கிணைத்து, வாழப்பாடியை மையமாக கொண்டு ஆர்.டி.ஓ. அலுவலகம் அமைக்க வேண்டும் என்பதே மலை கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply

Back to top button