நாங்கள் சாதி கட்சி அல்ல.! திருமாவின் கருத்தை நிரூபித்த தேர்தல் முடிவுகள்.!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி பெரும் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. திமுகவை தவிர அதன் கூட்டணி கட்சிகளும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வெற்றியை பெற்றுள்ளன. அதிலும் திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி 4 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அவர்களின் இந்த வெற்றி தமிழக அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

‘தலித் சிறுத்தைகள்’ என்னும் அமைப்பை ‘விடுதலை சிறுத்தைகள் கட்சியாக’ மாற்றம் செய்த தொல்.திருமாவளவன், பின் தனது கட்சியை தேர்தல் பாதைக்கு அழைத்து வந்தார். இதன் காரணமாக தனது அரசு வேலையை துறந்தார். கடந்த 1999-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்ட அக்கட்சி, முதல் தேர்தலிலேயே பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளையும், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளையும் பெற்றது. இந்த வெற்றியானது விடுதலை சிறுத்தைகள் கட்சியை தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சியாக அடையாளம் காட்டியது. அதுமுதற்கொண்டு இப்போது வரை தமிழகத்தின் முக்கிய கட்சியாக திகழ்கிறது.

ஆரம்பத்தில் தலித் இயக்கமாக அறியப்பட்டாலும் பிற்காலத்தில் பலதரப்பட்ட மக்களையும் தனது கட்சிக்குள் இணைத்துக்கொண்டது. மேலும் தலித் மக்களின் பிரச்சினைகளை தாண்டி வெகுஜன மக்களின் பிரச்சனைக்காகவும் பல போராட்டங்களை நடத்தி வந்தது. ஆனாலும் ஒரு குறிப்பிட்ட சாதியின் கட்சி என்ற பிம்பத்தை விட்டு அக்கட்சியால் வெளி வர இயலவில்லை. அதன் எதிர்ப்பாளர்களும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சாதி கட்சி என்றும் அதன் தலைவர் திருமாவளவனை சாதி தலைவர் என்றே விமர்சித்து வருகின்றனர்.

இந்த விமர்சனத்திற்கு ஒரு காரணமும் இருந்தது. திமுக, அதிமுக போன்ற முக்கிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தனித்தொகுதியில் மட்டுமே சீட் கொடுக்கப்பட்டு வந்தது. சில பொது தொகுதியில் போட்டியிட்டு இருந்தாலும் அங்கு அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. தனி தொகுதியில் மட்டுமே வென்று வந்ததால் நாங்கள் அனைத்து தரப்பு மக்களின் கட்சி தான் என்கிற விசிக வின் கோசம் அரசியல் அரங்கில் ஓங்கி ஒலிக்கவில்லை.

இதன் காரணமாக தான் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கூட திமுக கூட்டணியில் பொதுத்தொகுதி வேண்டும் என திருமாவளவன் கூறியிருந்தார். இந்த தகவல் வெளியானதும் இதற்கு திமுக தொண்டர்களே சமூக வலைத்தளங்களில் விமர்சித்திருந்தார்கள். அரசியல் விமர்சகர்கள் கூட பொதுதொகுதியில் விசிக வெற்றிபெறுவது கடினம் தான் என கூறியிருந்தனர். ஆனால் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் விசிக தனது முடிவில் உறுதியாக இருந்தது. இறுதியாக மு.க.ஸ்டாலினும் விசிகவிற்கு இரண்டு பொது தொகுதியை ஒதுக்கீடு செய்தார்.

அதன்படி திமுக கூட்டணியில் நாகப்பட்டினம், திருப்போரூர் ஆகிய இரு தொகுதிகள் விசிகவுக்கு ஒதுக்கப்பட்டன. பல்வேறு தரப்பினர் பொதுத்தொகுதியில் விசிக நிச்சயம் தோல்வியை சந்திக்கும் என்று கூறப்பட்ட நிலையில், நேற்று வெளியான தேர்தல் முடிவுகள் அந்த தரப்பினருக்கு கடும் அதிர்ச்சியை தான் கொடுத்துள்ளன. போட்டியிட்ட 6 தொகுதிகளில் 4 தொகுதிகளில் வெற்றிபெற்ற விசிக, போட்டியிட்ட இரண்டு பொதுத் தொகுதியிலும் அபார வெற்றிபெற்றது. நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்ட விசிக வேட்பாளர் ஷா நவாஸ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தங்க கதிரவனை வீழ்த்தினார். அதேபோல திருப்போரூர் தொகுதியில் போட்டியிட்ட விசிக வேட்பாளர் எஸ்.எஸ்.பாலாஜி பாமக வேட்பாளர் ஆறுமுகத்தை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் தங்களை தனி தொகுதியில் மட்டுமே வெற்றிபெறும் சாதி கட்சி என்ற நிலையை விசிக மாற்றி எழுதியுள்ளது. இதனைக் குறிப்பிட்டே இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூட “விடுதலை சிறுத்தைகள் கட்சியை ஒரு குறிப்பிட்ட சாதிய அடையாளத்துக்குள் ஒடுக்கிவிட நினைத்த மதவாத சாதியவாத சக்திகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விசிக 2 பொதுத் தொகுதிகளில் வெற்றியை பெற்றுள்ளது. பொது மக்களின் நன்மதிப்பைப் பெற்ற கட்சி என்ற நற்பெயரை விடுதலை சிறுத்தைகள் கட்சி வாங்கியிருக்கிறது” என குறிப்பிட்டார்.

விசிக தனி சின்னத்தில் நின்று வென்றதும் அரசியலில் முக்கியமான ஒரு திருப்பம் தான். தேர்தலுக்கு முன்பு திமுக கூட்டணி கட்சிகளை திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்கப்படும் என பேசப்பட்டது. ஆனால் வைகோ, திருமா போன்றோர் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என கூறியிருந்தனர். இறுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைகோ சம்மதம் தெரிவிக்க, திருமாவளவனோ தனி சின்னத்தில் தான் போட்டி என உறுதியாக இருந்தார்.

குறுகிய காலத்தில் மக்களிடையே ஒரு சின்னத்தை கொண்டுபோய் சேர்ப்பது அவ்வளவு எளிதல்ல. அதை திருமாவளவனும் உணர்ந்தே இருந்தார். ஆனாலும் தனி அங்கீகாரத்துடனும், தனி தன்மையுடனும் செயல்படவேண்டும் என்றால் அதற்கு தனி சின்னத்தில் போட்டியிடுவதே தீர்வு என துணிந்து தனி சின்னத்தில் போட்டியிட்டார்.அப்போதும் தனி சின்னத்தில் போட்டியிட்டால் விசிக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என்றே கூறப்பட்டது. ஆனாலும் தனி சின்னத்தில் நின்று வென்று காட்டியுள்ளார் திருமாவளவன்.

இந்த வெற்றியின் மூலம் விசிகவின் மீது பல ஆண்டுகளாக வைக்கப்பட்ட சாதி முத்திரையும், தனி தன்மையோடு செயல்படாத கட்சி என்ற சிந்தனையும் மாற்றி காட்டியுள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி. தலித் மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி இப்போது அனைத்து தரப்பட்ட மக்களுக்குமான கட்சியாக தன்னை மாற்றிக் காட்டியுள்ளது என்பது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்பம் தான்.

Back to top button