எதை ராஜினாமா செய்வது… எம்.பி பதவியா… எம்.எல்.ஏ பதவியா… குழப்பத்தில் கே.பி.முனுசாமி…

2021ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ள மாநிலங்களவை உறுப்பினர் கே.பி. முனுசாமி எந்த பதவியை ராஜினாமா செய்வது என்ற குழப்பத்தில் உள்ளார்.

தமிழகத்தில் 2021ம் ஆண்டுக்கான சட்டப்பேரவை தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. இதில் திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்கான கூட்டணிகளை அமைத்துக்கொண்டு 5 முனைகளாக போட்டியிட்டன. இந்த தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன.

இதில் அதிமுக சார்பில் கிருஷ்ணகிரி வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிட்ட ராஜ்யசபா உறுப்பினரான கே.பி.முனுசாமி சுமார் 3,211 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ஆனால் தேர்தலுக்கு முன், அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற அதீத நம்பிக்கையில் கே.பி. முனுசாமி இருந்தார். இதனால் சட்டமன்ற தேர்தலில் தான் வெற்றிப்பெற்றால் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று பிளானில் இருந்தார். ஆனால் விதி விளையாடிவிட்டது. அவர் ஜெயித்திருந்த நிலையில், அவரது கட்சித்தோற்றுவிட்டது.

தற்போது மிகுந்த குழப்பத்தில் இருக்கும் அவர், எம்எல்ஏ பதவியா… அல்லது எம்.பி பதவியா எதை ராஜினாமா செய்வது என்று ரூம் போட்டு யோசித்து வருகிறார். மேலும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தால், மீண்டும் தேர்தல் நடக்கும், அதில் திமுக வெற்றிப்பெற்றால் அதிமுக ஒரு சீட்டை இழந்து விடுமே என்ற தவிப்பில் உள்ளாராம்.

இது அவரது தவிப்பாக இருந்தாலும், மக்களும் ஒரு பக்கம் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் என்றதும், தேர்தல் ஆணையம் பல கோடி ரூபாய் செலவில் அதற்கான ஏற்பாடுகளை செய்து, மனித உழைப்புகளையும் அளித்து வருகிறது. அதுமட்டுமல்லாது கொரோனா காலக்கட்டத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து அசம்பாவிதம் நிகழாமல் இருக்கவும் ஏற்பாடு செய்துள்ளது.

ஆனால் கட்சியினரோ ஒரு பதவி இருக்கும்போதே, மற்றொரு உயர் பதவிக்கு ஆசைப்பட்டு மீண்டும் மீண்டும் தேர்தல்களில் போட்டியிடுகின்றனர். அவ்வாறு வெற்றிப்பெறும் பட்சத்தில், காலியாக இருக்கும் சட்டமன்ற தொகுதிகளுக்கு மீண்டும் தேர்தல் ஆணையம் முதலிலிருந்தே நிதி ஒதுக்கி, அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டியுள்ளது. இதனால் மக்கள் பணம் தான் வீணடிக்கப்படுகிறது.

எனவே மக்கள் பணியாற்றும் தலைவர்கள் இவற்றை சிந்தித்து செயல்பட வேண்டும் என பலரும் கருத்துக்கூறி வருகின்றனர்.

 

 

 

Back to top button