கரண்ட் வந்ததும் ஆக்ஸிஜன் கிடைக்கும்… ஸ்டெர்லைட் தகவல்…

ஸ்டெர்லைட் ஆலையில் மின் இணைப்பு வழங்கியதும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் என வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க ஆக்சிஜன் தேவையை கருத்தில் கொண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை மட்டும் இயக்க உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 27 ஆம் தேதி அனுமதி அளித்தது.

இதற்கான அனுமதி அளித்தும், கண்காணிப்புக் குழு அமைத்தும் தமிழக அரசு கடந்த 29 ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. இதனையடுத்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்து தேவையான அனுமதிகளை வழங்கினர்.

ஆனால் இதுவரை ஆலைக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் தேவையான அனைத்து முன் இயக்க சோதனைகளும் செய்யப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. மின் இணைப்பு கொடுக்கப்பட்டதும் உடனடியாக ஆக்சிஜன் உற்பத்திக்கான பணிகளைத் தொடங்க தயாராக இருக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button