குழந்தைகள் மீதான தடுப்பூசி பரிசோதனை பாதியில் நிறுத்தம் ..!!!

பிரிட்டனில் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியின் பரிசோதனை தற்கலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் மற்றும் அஸ்ட்ராசெனிகா மருந்து தயாரிப்பு நிறுவனம் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி உலகின் பல்வேறு நாடுகளிலும் அங்கீகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்துவது தொடர்பான பரிசோதனையை இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் சமீபத்தில் தொடங்கிய நிலையில் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதியவர்கள் சிலருக்கு ரத்த உறைவு பாதிப்பு ஏற்படுவதால் பரிசோதனையானது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், வேறு எந்த பாதுகாப்பு குறைபாடு காரணங்களும் இல்லை என ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் விளக்கமளித்துள்ளது.

பிரிட்டனின் மருந்துகள் மற்றும் சுகாதார ஒழுங்குமுறை ஆனையத்திடம் இருந்து கூடுதல் தரவுகள் கிடைத்த உடன் பரிசோதனையானது மீண்டும் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.