கெங்கவல்லியை கைப்பற்ற போவது யார்..?

சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 தொகுதிகளில், கெங்கவல்லி தனித்தொகுதியாகும். நடப்பு சட்டமன்ற தேர்தலில் இத்தொகுதி சார்பில் போட்டியிட 24 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 12 பேரின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது.

ஆத்தூர் தாலுக்கா (பகுதி) நடுவலூர், தெடாஊர், ஊனத்தூர், வேப்பநந்தம், வரகூர், சிறுவாச்சூர், மணிவழுதான், காட்டுக்கோட்டை, சதாசிவபுரம், சார்வாய், தலைவாசல், பட்டுத்துறை, நாவக்குறிச்சி, புத்தூர், நத்தக்கரை, பெரியேரி, ஆறகளுர், தியாகனூர், ஆராத்தி அக்ரஹாரம், மும்முடி, காமக்காபாளையம், வடகுமரை, தென்குமரை, சாத்தப்பாடி, பனவாசல், நாவலூர், சித்தேரி, கோவிந்தம்பாளையம் மற்றும் பள்ளிப்பாளையம் கிராமங்களை உள்ளடக்கியது இந்த தொகுதி.

இங்கு ஆண்கள் 1,14,127 பேர், பெண்கள்- 1,20,095 பேர், மாற்று பாலினத்தவர்- 2 பேர் என மொத்தம் 2,34,224 வாக்க்காளர்கள் உள்ளனர்.

தமிழகத்திலேயே 2-வது மிகப்பெரிய தினசரி காய்கறி சந்தை இத்தொகுதிக்கு உட்பட்ட தலைவாசலில் உள்ளது. மேலும் கோழிப்பண்ணைகள், சேகோ உற்பத்தி ஆலைகள் ஆகியனபரவலாக உள்ளன. அதுமட்டுமல்லாது ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்காவும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

நடப்பு தேர்தலில் சேலம் நகர முன்னாள் மேயரும், கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றவருமான ரேகா பிரியதர்ஷினியே இந்த முறையும் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக அதிமுக வேட்பாளர் ஏ.நல்லத்தம்பி களமிறக்கப்பட்டுள்ளார்.

வன்னியர், ஆதி திராவிடர்,கொங்கு வேளாளர், நாயக்கர், முதலியார் என பல சமுதாயத்தினரை பரவலாகக் கொண்ட தொகுதி. தலைவாசல் தொகுதியாக இருந்த கடந்த 2006ம் ஆண்டு வரை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 5 முறையும், திமுக 4 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

பின்னர் கெங்கவல்லி தொகுதியாக அறிவிக்கப்பட்டு, அதன்பின் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தேமுதிக வெற்றி பெற்றது. அதன்பின் 2016 தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக்கனியை ருசித்தது.

இந்த தொகுதியில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லை என்றாலும், கூட்டணி கட்சிகள் இருப்பது அக்கட்சிக்கு பலனமென்று தான் கருதப்படுகிறது. கடந்த தேர்தலில் பாமக இத்தொகுதியில் தனித்துப்போட்டியிட்டு 10 ஆயிரம் வாக்குகள் வரை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தொகுதிக்கு உட்பட்ட தலைவாசலில், ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் கொண்டு வந்ததும் அதிமுகவுக்கு சாதகமான அம்சமாக உள்ளது. தற்போதைய நிலையில், கெங்கவல்லி தொகுதியில் அதிமுக – திமுக ஆகிய இரு கட்சிகளுமே சமபலத்துடன் இருப்பதால் இழுபறி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.